வனப்பகுதியில் இறந்து கிடந்த வாலிபர்
கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் சிறுத்தை தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்
கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் சிறுத்தை தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணமாக கிடந்த வாலிபர்
கோவை வனச்சரகம் தடாகம் அருகே மேல்முடி தண்ணீர்பாறை வனப்பகுதி உள்ளது. சம்பவத்தன்று இந்த வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரின் உடலில் காயங்களும் இருந்ததாக தெரிகிறது. வன ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் தடாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
உடலில் காயங்கள்
அப்போது வாலிபரின் கழுத்து, வலது கை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை தாக்கியது போன்ற காயங்கள் இருந்ததாக தெரிகிறது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுகசூர்யா (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக வனப்பகுதிக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை தாக்கியதா?
இறந்த கிடந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்ததால், சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே வாலிபர் இறந்ததுக்கான முழு காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.