ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்-கொலையா?

தூசி அருகே தனியார் நிறுவன ஊழியர் விவசாய நிலத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி
தூசி அருகே தனியார் நிறுவன ஊழியர் விவசாய நிலத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு திரும்பவில்லை
செய்யாறு தாலுகா மடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மாரி. இவரது மகன் அசோக் குமார் (வயது 26). இவர் செய்யாறு சிப்காட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அசோக்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
வயலில் பிணம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை சோழவரம் கிராமத்தில் உள்ள வயலில் அசோக் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதுகுறித்து தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் அசோக் குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அடித்து கொலையா?
அப்போது அசோக் குமார் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம். அல்லது சாலை விபத்தில் சிக்கி இறந்தவரை தூக்கி விவசாய நிலத்தில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அசோக்குமாரின் சகோதரர் பாலாஜி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






