மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் ஹரிபிரசாந்த் (வயது 22). வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர், கோட்டை பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது, சாலையை 2 குழந்தைகள் கடந்து சென்றனர். அப்போது, அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஹரிபிரசாந்த் மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாந்த் உயிரிழந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.