2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பட்டுக்கோட்டையில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனை
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ், போலீஸ்காரர்கள் அருள்மொழி, நவீன், அழகு, சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வாலிபர்கைது
இந்த நிலையில் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ரிஷிகுமார் (வயது23) என்பவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததால் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவர் இரு வாரங்களுக்கு ஒரு முறை ஸ்கூடடரில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டரையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.