அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
க பரமத்தி அருகே கஸ்பா நெடுங்கூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவருக்கு க.பரமத்தி காருடையாம்பாளையம் அருகே கரூர் -கோவை மெயின் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகில் சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நுழைவாயிலில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 30 சென்ட் நிலம் காருடையாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் தனது நிலத்திற்கு முன் பகுதியில் (மயானத்தில்) உள்ள வேப்பமரம் மற்றும் பனைமரத்தை பிடுங்கி அதில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணி அங்கு வந்து கார்த்திக்கிடம் விசாரித்துள்ளார். அப்போது கார்த்தி, பாலசுப்பிரமணியை தகாத வார்த்தையால் திட்டியும், வேலையை செய்ய விடாமலும் தடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.