விழுப்புரத்தில் பரபரப்பு:கடன் தர மறுத்ததால் வாலிபர் வெட்டிக்கொலை; கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் கடன் தர மறுத்ததால் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் கொடுப்பவர்
விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்ற ராம்குமார் (வயது 30). இவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீராம், நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தான் வைத்திருந்த வீச்சரிவாளால் ஸ்ரீராமின் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வெட்டிக்கொலை
இதில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம், அதே இடத்தில் சாய்ந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீராமை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீராமின் பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்
கடந்த மாதம் 19-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் சென்று ரூ.2 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அதற்கு, எந்த வேலையும் பார்க்காமல் ஊதாரித்தனமாக சுற்றிவரும் உனக்கு கடன் கொடுக்க முடியாது என்று ஸ்ரீராம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பாலாஜி மீது நகர போலீசில் ஸ்ரீராம் புகார் கொடுத்துள்ளார்.
இதனால் ஸ்ரீராம் மீது பாலாஜிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீராம் உயிரோடு இருக்கக்கூடாது என்று கருதி அவரை கொலை செய்ய பாலாஜி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி ஸ்ரீராம் தனியாக செல்வதை நோட்டமிட்ட பாலாஜி, ஸ்ரீராமை வழிமறித்து, வீச்சரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலாஜியை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீராமுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.






