பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை


பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
x

கடையில் பிரியாணி வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பத்தூர்,

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 23). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், மண்ணூர்பேட்டையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்க சென்றார்.

அப்போது அதே கடைக்கு பிரியாணி வாங்க வந்த 3 பேருக்கும், பாலசந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பாலச்சந்திரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பாலச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமா?

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்டு பாலச்சந்திரன் வம்புக்கு இழுத்து கொலை செய்தனரா? அல்லது கடையில் பிரியாணி வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story