மதுக்கடை அருகே வாலிபர் வெட்டிக்கொலை


மதுக்கடை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
x

தஞ்சையில் மதுக்கடை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை பள்ளியக்கிரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரேம் (வயது30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக பணிபுரிந்தவர். நேற்றுபிற்பகல் பிரேம், அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே வயல்வெளிக்கு மத்தியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றார். அங்கு அவர், மது அருந்தியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அங்கு வந்த 4 பேர் திடீரென அரிவாளால் பிரேமை முகத்திலும், தலையிலும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரேமை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சாலை மறியல்

ஆனால் செல்லும்போது வழியிலேயே பிரேம் இறந்தார். இந்த தகவல் அறிந்த பிரேம் குடும்பத்தினர் மற்றும் , நண்பர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி பள்ளியக்கிரஹாரம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கொலையாளிகள் யார்? என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தின.

இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பள்ளியக்கிரஹாரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மாற்று பாதையின் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பள்ளியக்கிரஹாரத்தில் சாலை மறியலை கைவிட்டுவிட்டு, கோடியம்மன்கோவில் பகுதிக்கு சென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்வதாகவும், அது குறித்து புகார் அளிக்கும்படியும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.


Next Story