பட்டாசுகள் வெடித்து சிதறி வாலிபர் பலி
பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலக்கோடு
கோவில் திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி இரவு சாமி ஊர்வலம் நடந்தது. திருவிழாவில் பட்டாசுகள் சரக்கு வாகனத்தில் வைத்து வெடித்தனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மளமளவென வெடிக்க தொடங்கியது. இதனால் சாமி ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க திரண்டு இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினர்.
வாலிபர் சாவு
அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறி தீப்பொறி விழுந்ததில் கருப்பாயிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 21), பரசுராமன் (20), யாசிகா (6), பிரதிக்ஷா (7), தர்ஷன் (6) ஆகிய 5 பேர் தீக்காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.