குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
x

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). இவர், தன்னுடைய நண்பர்களான திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ் (45), முரளி (25) ஆகியோருடன் கோயம்பேடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் முரளி மற்றும் மோகன்ராஜ் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன்ராஜ் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலி (28) இவர்களது வீட்டின் எதிரே குன்றத்தூரைச் சேர்ந்த ஆனந்தன் (40) என்பவர் கோழி இறைச்சி கடை வைத்து உள்ளார்.

இறைச்சி வாங்கி கடைக்கு சென்ற அஞ்சலியை, ஆனந்தன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மணிகண்டன், தனது உறவினரான கார்த்திக் (34) என்பவருடன் சேர்ந்து ஆனந்தனிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன், கோழி வெட்டும் கத்தியால் கார்த்திக்கின் கை, உதடு, மார்பு, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த கார்த்திக், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 50 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தனை தேடி வருகின்றனர்.


Next Story