நள்ளிரவில் மது கேட்டு காவலாளியை தாக்கிய வாலிபர் கைது
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் மது கேட்டு காவலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இங்கு பேராவூரை சேர்ந்த கருப்பன் (வயது 70) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கடையை திறந்து மது எடுத்து தா என்று கேட்டுள்ளனர். அவர் தான் காவலாளி என்றும் நாளை 12 மணிக்கு வந்து மது வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கருப்பனை கீழே தள்ளி மிதித்து தாக்கி உள்ளனர்.
மேலும், பட்டாகத்தியை எடுத்து தலையில் தாக்கி உள்ளனர். கருப்பன் செல்போனை எடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றபோது செல்போனை பறித்து உடைத்துள்ளனர். அவர் சத்தம்போடவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட 3 மர்ம நபர்கள் கருப்பனை எச்சரித்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் மணிகண்டபிரபு அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து பேராவூர் சந்திரகுமார் மகன் நவீன் (22), தம்பி ஆகாஷ் (20) ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக பேராவூர் கிழக்கு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மகன் அஜய் (23) என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.