புரோட்டீன் பவுடர் அதிகமாக சாப்பிட்ட வாலிபர் பலி

கோவையில் கட்டுக்கோப்பான உடலுக்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் பலியானார்.
கணபதி
கோவையில் கட்டுக்கோப்பான உடலுக்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் பலியானார்.
உடற்பயிற்சி
இன்றைய இளைஞர்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் வெகுவிரைவில் தங்களின் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் டாக்டரின் அறிவுரை இல்லாமல் அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்கிறார்கள்.
இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அப்படி ஒரு சம்பவம் கோவை கணபதியில் ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வாலிபர்
கோவை கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் தினகர் (வயது 30). இவர் தனது தந்தையுடன் பழைய பொருட்களை வாங்கி அவற்றை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உள்ளார். நாளடைவில் தனது உடலில் 'சிக்ஸ் பேக்'காக இருக்க வேண்டும் என்பதற்காக அசைவ உணவு அதிகளவில் சாப்பிட்டதுடன் உடற்பயிற்சியும் அதிகமாக செய்து உள்ளார். அத்துடன் அதற்காக அவர் புரோட்டீன் பவுடர்களையும் (சத்து மாவு) அதிகமாக வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது.
வயிறுவலி
இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக தினகருக்கு வயிறுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் ஜிம்முக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்து உள்ளார். இதற்கிடையே அவருக்கு வயிறுவலி அதிகமானது. இதனால் அவர் வாந்தியும் எடுத்து உள்ளார்.
தாங்க முடியாத அளவுக்கு வயிறுவலி இருந்ததால், அவர் தனது தந்தையுடன் கூறினார். இதையடுத்து பழனிசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தினகரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிதாப சாவு
இருந்தபோதிலும் தினகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினகர், அதிகளவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்டதாலும், அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து போனதாலும் அதிகமாக வயிறுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் அவர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டுக்கோப்பான உடலுக்கு ஆசைப்பட்டு, அதிகளவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.