வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது


வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2023 7:30 PM GMT (Updated: 29 Aug 2023 7:30 PM GMT)

கொடைரோடு அருகே வியாபாரி வீட்டில் புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

பூ வியாபாரி வீட்டில் திருட்டு

கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). பூ வியாபாரி. கடந்த 18.7.23-ந்தேதியன்று இவர், தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தரைதளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடி சென்று விட்டார்கள்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணா காந்தி, சேக் அப்துல்லா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபர் கைது

இதற்கிடையே சம்பவ இடத்தில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். அதில் பல்வேறு வழக்கு களில் தொடர்புடைய மதுரை மாவட்டம் மேலூர் பட்டணத்தை சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை (வயது 24) என்பவரின் கைரேகை பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரியசாமியை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் நகை, 82 கிராம் வெள்ளி, விலை உயர்ந்த கேமரா, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story