கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 10½ பவுன் நகையை பறிக்க முயன்ற வாலிபர்
கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 10½ பவுன் நகையை பறிக்க முயன்ற வாலிபர்
பீளமேடு, ஜூன்
கோவையில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 10½ பவுன் நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பேன்சி கடை
கோவை பீளமேடு கள்ளிமேடு தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது 57). இவர்கள் பீளமேட்டில் பேன்சி கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் பொன்மணி கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கடைக்குள் நுழைந்தார். பின்னர் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பொன்மணியின் கழுத்தில் அணிந்திருந்த 10½ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்மணி கூச்சலிட்டார்.
போலீசில் ஒப்படைப்பு
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பொன்மணியிடம் நகை பறித்து விட்டு தப்ப முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நகை பறித்தது பீளமேடு கிரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ஜூன் (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பட்டப்பகலில் கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பீளமேடு பகுதியில் அடிக்கடி பூட்டியிருந்த வீட்டை குறி வைத்து நகை பறிப்பு சம்பவம் நடைபெறுகிறது. தற்போது பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து நகை பறிக்க முயன்று உள்ளனர். எனவே பீளமேடு பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.