காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கல்லூரி மாணவி

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவரது உறவினரான சிவகங்கை மாவட்டம், முசுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சேது (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சேது புதுக்கோட்டை அருகே ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது அவரை பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைத்து கல்லூரிக்கு செல்ல செல்வராஜ் ஏற்பாடு செய்தார். செல்வராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கணவரை பிரிந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு சென்றார். இந்த விவரம் சேதுவுக்கு தெரியாமல் மறைத்து காதலித்து வந்தார்.

காதலியை எரித்து கொன்ற வழக்கு

இந்த நிலையில் கல்லூரி விடுமுறையின் போது சேது தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டம் சாத்தனூர் திரும்பினார். அப்போது செல்வராஜ் வீட்டில் வைத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சேது பெற்றோர் வீட்டிற்கு சென்றதை தட்டிக்கேட்டுள்ளார். இந்நிலையில், திருமணமானதை தன்னிடம் மறைத்தது தொடர்பாக செல்வராஜிடம் சேது கேள்வி எழுப்பினார்.

இதில் தகராறு ஏற்பட்டதில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி சேதுவின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி செல்வராஜ் தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இதுதொடர்பாக காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த செல்வராஜ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினார். இதில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் செல்வராஜிக்கு திருமணமானதை மறைத்து காதலித்ததற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், பெண்ணை எரித்து கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார்.

மேலும் அபராத தொகை ரூ.2½ லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


Next Story