சொந்த ஊருக்கு வந்த வாலிபர் திடீர் சாவு


சொந்த ஊருக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வாலிபர் திடீரென உயிரிழந்தாா். அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை


மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வாலிபர் திடீரென உயிரிழந்தாா். அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசியாவுக்கு சென்றார்

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பாட்சா மகன் பஷீர்அகமது (வயது 25). மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் நடத்தி வரும் ஓட்டலில் வேலைக்காக 5 ஆண்டு ஒப்பந்தத்தில் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பஷீர் அகமதுவை மலேசியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதைதொடர்ந்து பஷீர் அகமது, தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு மலேசியாவில் 16 மணி நேர வேலை வழங்குவதாகவும், உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரத்த வாந்தி எடுத்து சாவு

இதனால் 8 மாதத்திற்குள் பஷீர் அகமதுவை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர். சொந்த ஊருக்கு வந்த பஷீர் அகமது திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஷீர் அகமது கடந்த மே மாதம் 9-ந்தேதி உயிரிழந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உறவினர்கள் தர்ணா

இந்த நிலையில் பஷீர் அகமதுவை கொத்தடிமையாக நடத்திய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story