நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு
வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
வால்பாறை
வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
காதலியுடன் வந்த வாலிபர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் பிர்லா நீர்வீழ்ச்சிக்கு, கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த சாஹர்(வயது 21) என்பவர் தனது காதலியான 19 வயது கல்லூரி மாணவியுடன் கடந்த 29-ந் தேதி சுற்றுலா வந்தார்.
நீர்வீழ்ச்சியை அருகில் சென்று ரசித்து கொண்டு இருந்தபோது, திடீரென கால் தவறி தடாகத்தில் சாஹர் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்று கல்லூரி மாணவியும் உள்ளே விழுந்தார். இதனால் அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
சுழலில் சிக்கினார்
இதற்கிடையில் பாறையில் மோதி நின்ற நிலையில் கல்லூரி மாணவி உயிர் தப்பினார். ஆனால் சாஹர், சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிர்லா நீர்வீழ்ச்சிக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து உள்ளூர் நீச்சல் வீரர் உதவியுடன் தடாகத்தில் இறங்கி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி 4 நாட்களாக நடைபெற்றது.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் சாஹர் பிணமாக கிடப்பதை கண்ட தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.