கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் பாலாஜி அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தர்மபுரியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தர்மபுரி மாவட்டம் நாரியம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரது மகன் கார்த்தி(வயது 19) மற்றும் சிலர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிணற்று சுற்றுச்சுவரில் உள்ள செடிகளை அகற்ற இரும்பு பக்கெட்டில் அமர்ந்து, ரோப் மூலம் கார்த்தி உள்ளே இறங்கியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் திடீரென பக்கெட் கொக்கி உடைந்து, கிணற்றுக்குள் கார்த்தி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தந்தை இறந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு வந்த 2-வது நாளே கார்த்தி விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






