ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை முயற்சி
கீரனூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே மேலப்புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ராதாகிருஷ்ணன் என்கிற கார்த்தி (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக தனது சம்பள பணம், வீட்டில் இருந்து நகையை வாங்கி அடகு வைத்து அதில் கிடைத்த பணம் மற்றும் தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்று என பல்வேறு இடங்களில் கடனாக பணம் வாங்கி ரூ.3 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷத்தை குடித்தார். இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடிதம்
இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தில், தான் சூதாட்டத்தில் இழந்த பணம் குறித்தும், தமிழக அரசு சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
மேலும் எனது குடும்பத்தாருக்கு உதவ வேண்டும். நண்பர்களிடம் எனது குடும்பத்தாருக்கு பண உதவி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் விஷம் குடித்த சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.