குடிபோதையில் கடைக்கு தீவைத்த வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே குடிபோதையில் கடைக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே குடிபோதையில் கடைக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடைக்கு தீவைப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்பவர் கவனித்து வருகிறார். இந்த நிலையத்தில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கிருஷ்ணவேணி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இதற்கிடையில் கடையில் இருந்து புகை வந்ததால், இதுகுறித்து அவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கடைக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அவர் தீயை அணைத்தார். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமானது. மேலும் அந்த வழியாக சென்ற மின்சார ஒயரும் கருகி இருந்தது. இதனால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து அவர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.
வாலிபர் கைது
இதை தொடர்ந்து மறுநாள் அவர் கடைக்கு சென்று பார்த்த போது, எண்ணெய் பாக்கெட்டுகள், சூடம், திரி ஆகியவற்றை சேதப்படுத்தி யாரோ மர்ம நபர் தீவைத்து சென்றது தெரியவந்தது. மேலும் அந்த மர்மநபர் கடைக்குள் ஆபாசமாக எழுதி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசாார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் கடைக்கு தீவைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.