போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்
அபராதம் விதித்த ஆத்திரத்தில், போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு வாலிபர் தப்பினார். நத்தம் அருகே தனியார் பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதால் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டார்.
தனியார் பஸ் மீது மோதல்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்துக்கு நேற்று முன்தினம் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு அந்த பஸ் வந்தது. அங்கு நின்ற பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிள், தனியார் பஸ் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றொருவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.
போலீஸ் துறையின் மோட்டார்சைக்கிள்
விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் போலீஸ் துறைக்கு சொந்தமானது ஆகும். அதில் சி-5, போலீஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், போலீஸ் துறையோடு தொடர்பு உடையவர்களாக இருக்கலாம் என்று முதலில் பொதுமக்கள் கருதினர்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களின் நடவடிக்கையை பார்த்தபோது அவர்களுக்கு அப்படி தெரியவில்லை. இதனால் அந்த வாலிபர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வாகன சோதனை
விபத்தில் சிக்கிய 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, விபத்தில் சிக்கிய ஒருவரின் பெயர் பிரபு (வயது 30). சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் இரவு இவர், மதுரை அய்யர்பங்களா அருகே நத்தம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபுவின் மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.
குடிபோதையில் இருந்ததாக கூறி பிரபுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிரபுவின் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் நிற்குமாறு போலீசார் அவரை அறிவுறுத்தினர். அதன்பேரில் பிரபு அங்கு நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தார்.
அபராதம் விதித்ததால் ஆத்திரம்
இதற்கிடையே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்வதில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். பிரபுவை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால், தனக்கு அபராதம் விதித்த போலீசார் மீது பிரபு ஆத்திரத்தில் இருந்தார். இதனால் போலீசாரை பழிவாங்க அவர் நினைத்தார்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் துறையால் வழங்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையோரத்தில் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. இது, பிரபுவின் கண்களில் பளிச்சிட்டது. போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டதை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்தி கொண்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
அதாவது, அந்த மோட்டார் சைக்கிளை நைசாக திருடி கொண்டு பிரபு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினார். நத்தம் வந்த அவர், அங்கு நின்று கொண்டிருந்த தனது நண்பரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார்.
அதன்பிறகு அவர்கள் 2 பேரும், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான், தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதனால் அவர்கள் 2 பேரும் பொதுமக்களிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
போலீசாரிடம் ஒப்படைப்பு
இதற்கிடையே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த பிரபுவையும் காணவில்லை. இதனால் அவர் தான் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருக்கக்கூடும் என்று போலீசார் கருதினர்.
இதனையடுத்து மதுரை, நத்தம் பகுதியில் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மோட்டார் சைக்கிளுடன் பிரபு சிக்கிய தகவல் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நத்தம் வந்த மதுரை போலீசாரிடம் பிரபு, அவரது நண்பர் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் துறைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளும் ஒப்படைக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.