கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது
எருமப்பட்டி அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
எருமப்பட்டி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நாமக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகன், சுப்பிரமணி மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பொன்னேரி கைகாட்டி அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
அதில் அந்த வாலிபர் சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு அன்பு நகர் பகுதியை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் முகமது அப்துல்லா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.