திருடிய ஸ்கூட்டியில் உலா வந்த வாலிபர் உரிமையாளரிடமே சிக்கினார்


திருடிய ஸ்கூட்டியில் உலா வந்த வாலிபர் உரிமையாளரிடமே சிக்கினார்
x

திருடிய ஸ்கூட்டியில் உலா வந்த வாலிபர் உரிமையாளரிடமே சிக்கினார்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் திருட்டு ஸ்கூட்டியில் உலா வந்த வாலிபரை ஸ்கூட்டி உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

திருட்டு

கோவை பி.என்.புதூர் பொன்நகரை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 32). தனியார் நிதி நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை இறைச்சி வாங்குவதற்காக சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு இறைச்சி கடைக்கு தனது ஸ்கூட்டியில் சென்றார். அங்கு அந்த இறைச்சி கடை முன் ஸ்கூட்டியை நிறுத்தி இருந்தார்.

பின்னர் அவர் இறைச்சி வாங்கி விட்டு திரும்ப வந்த போது அங்கு அவர் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் தனது ஸ்கூட்டி குறித்து விசாரித்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த ஸ்கூட்டியை ஓட்டி சென்றதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மறுநாள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கலாம் என்று நினைத்து வீட்டிற்கு சென்றார்.

போலீசில் ஒப்படைப்பு

இதனைத்தொடர்ந்து மறுநாள்காலை மகேஷ்வரி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிப்பதற்காக அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது பி.என்.புதூர் மாரியம்மன் கோவில் அருகே வாலிபர் ஒருவர் ஸ்கூட்டியில் ஜாலியாக சென்று கொண்டிருந்தார். அந்த ஸ்கூட்டியை பார்த்ததும் மகேஷ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

மகேஷ்வரிக்கு சொந்தமான அந்த ஸ்கூட்டியில் அந்த வாலிபர் ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து மகேஷ்வரி திருடன் என்று கூச்சலிட்டு கத்தினார். அவரது சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த வேலு என்கிற வேலுசாமி (29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஸ்கூட்டியை திருடிய வாலிபர் அதன் உரிமையாளரிடமே சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story