போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் திடீர் சாவு


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் திடீர் சாவு
x

ஓட்டேரியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). இவர் மீது வியாசர்பாடி, ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 20-ந்தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியரான பாலகிருஷ்ணமூர்த்தி (37) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது காரின் முன்பக்க கண்ணாடியை ஆகாஷ் கல்லால் அடித்து உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட பாலகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுபற்றி ஓட்டேரி போலீசில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார்.

மயங்கி விழுந்து சாவு

இதுதொடர்பாக 21-ந்தேதி இரவு ஓட்டேரி போலீசார் ஆகாசை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்கா காயத்ரியை வரவழைத்து, மறுநாள் ஆகாசை போலீஸ் நிலையம் அழைத்து வரும்படி கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு வீட்டுக்கு சென்ற ஆகாஷ் மேலும் குடித்துவிட்டு, போதை மாத்திரைகள் தின்றதாக கூறப்படுகிறது. இதனால் சுயநினைவிழந்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் தாக்கியதால்...

ஆகாசை விசாரணைக்காக அழைத்துச்சென்ற போலீசார், போலீஸ் நிலையத்தில் அவரை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள், ஆகாசின் உடலை வாங்க மறுத்தனர். போலீசார் மற்றும் டாக்டர்கள் சமாதானம் செய்ததால் உடலை வாங்கிச்சென்றனர். இது தொடர்பாக இணை கமிஷனர் ரம்யபாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானிசெல்லப்பாவிடம் விசாரணை நடத்தினர். ஆகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என முன்னெச்சரிக்கையாக ஓட்டேரி போலீஸ் நிலையம் மற்றும் அவரது வீட்டின் அருகில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் இதுபற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி எழும்பூர் 10-வது குற்றவியல் நடுவர் லட்சுமி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story