காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்த வாலிபருக்கு கத்திக்குத்து
காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்த வாலிபருக்கு கத்திக்குத்து
கோவை
கோவையில் காதலி வீட்டிற்கு சென்று தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டறை தொழிலாளி
கோவை தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 24). இவர் சலீவன் தெருவில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்த செல்வபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் தனது தாயாரின் செல்போன் எண்ணுக்கு நான் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்ததாகவும், அவருடன் வெளியே வந்துவிட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து இளம்பெண்ணை சுந்தரமூர்த்தி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் 10 நாட்கள் கழித்து இருவரும் கோவை திரும்பினர். இதையடுத்து இருவரும் அவரவர் வீட்டுக்கு தனித்தனியாக சென்று விட்டனர். வீட்டுக்கு சென்ற இளம்பெண் நான் சுந்தரமூர்த்தியை திருமணம் செய்ய வில்லை என்றும், அவருடன் வெளியில் சென்று வந்ததாக கூறியதாக தெரிகிறது.
கத்திக்குத்து
இதையடுத்து இளம்பெண்ணைஅவரது பெற்றோர் சுந்தரமூர்த்தியிடம் பேசக்கூடாது என்று கண்டித்து வீட்டில் சேர்த்துக்கொண்டனர். பின்னர் அந்த இளம் பெண் மீண்டும் கடைக்கு வேலைக்கு சென்றார். ஆனால், சுந்தரமூர்த்தி அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி தனது நண்பர் ஹரிஹரன் (23) என்பவருடன் காதலி வீட்டுக்கு சென்று தன்னிடம் பேசுமாறு கூறினார். ஆனால் அதற்கு அவா் பேசமறுத்தாா். இதனால் அவா்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம்கேட்டு வீட்டில் இருந்த பெண்ணின் தாயார் அங்கு வந்தார்.
அப்போது ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி தனது நண்பருடன் சேர்ந்து இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர் செல்வின் (19), அவரது நண்பர் மெக்கானிக் பிரகாஷ் (19) ஆகிய இருவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை கத்தியால் குத்தினர். ஹரிஹரனையும் தாக்கினர். கத்தி குத்தில் காயமடைந்த சுந்தரமூர்த்தி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக இருதரப்பினரும் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியை கத்தியால் குத்திய செல்வின், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் சுந்தரமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் ஹரிஹரன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஹரிஹரனை போலீசார் கைதுசெய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுந்தரமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.