`புளூடூத்' பயன்படுத்தி அரசு தேர்வு எழுதிய வாலிபர்


`புளூடூத் பயன்படுத்தி அரசு தேர்வு எழுதிய வாலிபர்
x

புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு தேர்வில், சினிமா பாணியில் புளூடூத் பயன்படுத்தி தேர்வெழுதிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

பொறியியல் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இம்மையத்தில் தேர்வெழுத 1,299 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 666 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். காலை 9.15 மணிக்கு அனைவரும் தேர்வு அறைக்குள் அமர்ந்த பிறகு, விடைத்தாள்களை வினியோகிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

புளூடூத் கருவி

அப்போது, அறந்தாங்கி குளத்தூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் தர்மன் (வயது 20) என்பவர் தேர்வு எழுதும் விதத்தில் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் அவரை சோதனையிட்டுள்ளார். அப்போது, சினிமா பாணியில் பட்டன் கேமரா, புளூடூத் கருவியை பயன்படுத்தி தேர்வு எழுதியது தெரியவந்தது. தேர்வு விதிமுறைகளுக்கு முரணாக தேர்வு எழுதிய அவர் மீது புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரி புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தர்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு விடைகளை சொல்லி உதவியதாக ஈரோட்டை சேர்ந்த பரணிதரன் (20) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story