இடையத்தான்குடி பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி
இடையத்தான்குடி பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ரமணசரஸ்வதி பேசுகையில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொலைநோக்கி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பள்ளி மாணவ-மாணவிகளால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வானின் அற்புதங்களை காணும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை பெற்றுள்ளனர். இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப கல்வி பயில்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக தொலைநோக்கி மூலம் வான் நிகழ்வுகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பு இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகாமை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணம் தொலைநோக்கி ஆனது பள்ளி வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் அம்பிகாபதி, பள்ளி தலைமையாசிரியை ஹேமலதா, பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.