7 தலைமுறைகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழா


7 தலைமுறைகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழா
x

திருமயம் அருகே ஏழு தலைமுறைகளுக்கு பின் நடந்த கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபட்டனர்.

புதுக்கோட்டை

முப்புலிக்கருப்பர் கோவில்

திருமயம் அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தில் முப்புலிக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த மூன்று கரை பங்காளிகளுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏழு தலைமுறைகளுக்கு முன்பு அக்கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்த தலைமுறைகள் பூஜை நடத்துவதை விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட கோவிலை சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஏழு தலைமுறைகளாக தடைப்பட்டுள்ள கோவில் விழாவை ஊர் மக்கள் நலம் காக்கவும், விவசாயம் செழித்து வளரவும், மழை பெய்திட வேண்டி மீண்டும் நடத்த முடிவு செய்தனர்.

கிடாவெட்டு பூஜை

இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முப்புலி கருப்பர் கோவிலில் கிடா வெட்டு பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவின் தொடக்க நாளான நேற்று முன்தினம் சின்னம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவிலில் பூக்கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி முன்பு கோடு வெட்டி ஏழு பானை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, சாமி அழைத்தல், பானை ஏறுதல், அக்னி இறங்குதல், அரிவாள் ஏறுதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சுவாமிகளுக்கு படையல் போடும் நிகழ்வு நடைபெறுவதோடு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனிடையே ஏழு தலைமுறைகளுக்கு முன்பு கைவிடப்பட்ட கோவில் நிகழ்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது அப்பகுதி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story