வியாபாரிகள் அனைவருக்கும் தற்காலிக கடை ஒதுக்க வேண்டும்; மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு
பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் தற்காலிக கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் தற்காலிக கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி ஆணையாளர் (நிர்வாகம்) வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
இதில் நெல்லை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி எம்.ஆர்.குணசேகரன், துணைத்தலைவர் அருள் இளங்கோ, துணை செயலாளர் சேகர், பாளையங்கோட்டை நகர தொழில் வர்த்தக சங்க தலைவர் ராமதாஸ், செயலாளர் சோமு, பொருளாளர் மாரி, செயற்குழு உறுப்பினர் லிபனான் சார்லஸ் உள்பட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அதிகாரிகளையும் மற்றும் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட்
அந்த மனுவில், ''பாளையங்கோட்டை மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கடைகள் கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி அங்கு வியாபாரம் செய்து வரும் அனைத்து வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகள் ஒதுக்கி தரவில்லை. 540 வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகள் ஒதுக்கீடு செய்து கொடுத்த பிறகே மார்க்கெட்டை இடிக்க வேண்டும். மேலும் சமீபத்தில் கடைகளை காலி செய்ய வந்த பாளையங்கோட்டை அதிகாரி தரக்குறைவாக வியாபாரிகளை பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட் அருகே சாலையை அடைக்கும் நோக்கில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
போக்குவரத்து இடையூறு
தியாகராஜ நகர் சமூக ஆர்வலர் செல்வகுமார் கொடுத்த மனுவில், ''மகாராஜ நகர் உழவர் சந்தையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கிறார்கள். இந்த உழவர் சந்தைக்கும், அருகில் உள்ள புதிய பாலத்துக்கும் இடையே உள்ள சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதாலும், அதில் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதாலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.
இதே போல் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.