பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து
கும்பகோணத்தில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பிரபல ஜவுளிக்கடை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் அடித்தளம், தரைத்தளம், உள்ளிட்ட 4 தளங்களை கொண்டது. இந்த கடையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாள்தோறும் இந்த கடைக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து துணிமணிகள் வாங்கி செல்வது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர்.
தீவிபத்து
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஜவுளிக்கடையின் முன்பக்கத்தில் இருந்த அலங்கார முகப்பின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவி முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் இந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது ஜவுளிக்கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
60 அடிஉயரம் வரை..
இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் நிலைய தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் 60 அடி உயரம் வரை தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க போதிய வசதிகள் இல்லாததால் இருக்கும் உபகரணங்கள் மற்றும் லேடர் கருவிகளை கொண்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.
புகைமூட்டம்
வானுயர பற்றி எரிந்த தீ நகரின் பல பகுதிகளில் இருந்தும் தென்பட்டது. மேலும் இந்த தீயால் எழும்பிய புகைமூட்டம் கும்பகோணம் நகர் முழுவதும் பரவியதால் நகர் முழுவதும் பதற்றம் நிலவியது.
இந்த ஜவுளிக்கடை அருகில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் ஆகியவை உள்ளது. இந்த தீவிபத்தினால் ஆஸ்பத்திரியில்இருந்த நோயாளிகள் மற்றும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். 40 நிமிட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் ஒரு வழியாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அலங்கார முகப்பு எரிந்து நாசம்
இந்த தீவிபத்தில் ஜவுளிக்கடையின் முன் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள அலங்கார முகப்பு பகுதி முற்றிலும் நாசமானது. இதுகுறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்போணம் நகரின் முக்கிய பகுதியில் இருந்த பிரபல நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.