மனைவி, குழந்தையுடன் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


மனைவி, குழந்தையுடன் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x

சின்னாளப்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் விரக்தியடைந்த ஜவுளி வியாபாரி, தனது மனைவி, குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திண்டுக்கல்

ஜவுளி வியாபாரி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன். இவர், விக்கிரமபுரத்தை சேர்ந்த சங்கரி (வயது 23) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தாராஸ்ரீ (2) என்ற குழந்தையும், பெயர் வைக்கப்படாத சில வாரங்களுக்கு முன்பு பிறந்த மற்றொரு குழந்தையும் உள்ளது. ரமேஷ் கண்ணன் நிலக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தற்போது இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி திரு.வி.க. நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

வட்டி கேட்டு மிரட்டல்

இந்தநிலையில் ரமேஷ் கண்ணனுக்கு ஜவுளி வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் வாங்கிய கடனை கட்டிய பிறகும் கூடுதல் வட்டி கேட்டு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி ரமேஷ் கண்ணாவின் வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரமேஷ் கண்ணன் மற்றும் அவரது மனைவி மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் விரக்தியடைந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

தற்கொலை முயற்சி

அதன்படி, நேற்று காலை 11 மணி அளவில் ரமேஷ்கண்ணன், சின்னாளப்பட்டியை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்தார். அப்போது வெளியூர் சென்றுவிட்டு வருவதாக கூறி ரமேஷ்கண்ணன் தனது கைக்குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

பின்னர் ரமேஷ் கண்ணன், தனது மனைவி சங்கரி, மகள் தாராஸ்ரீ ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சின்னாளப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு ரமேஷ் கண்ணன், தனது மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்தார். பின்னர் தானும் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள், மயங்கிய நிலையில் கிடந்த தம்பதி மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உருக்கமான கடிதம்

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார், ரமேஷ் கண்ணனின் வீட்டிற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டுக்குள் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரமேஷ் கண்ணன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

அதில், சின்னாளப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 7 பேரிடம் கடன் வாங்கினேன். அந்த கடனை வட்டியோடு சேர்த்து கட்டிவிட்டேன். ஆனால் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ்கண்ணன் மற்றும் அவரது மனைவி சங்கரி ஆகியோர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கந்து வட்டி கொடுமையால் ஜவுளி வியாபாரி, தனது மனைவி, குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்னாளப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story