குமரியில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடைப்பு
குமரி மாவட்டத்தில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள காட்சி கூண்டில் அடைக்கப்பட்டது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள காட்சி கூண்டில் அடைக்கப்பட்டது.
அட்டகாசம் செய்த புலி
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு, மல்லன்முத்தன்கரை, மோதிரமலை மூக்கறைக்கல், வட்டப்பாறை புறத்திமலை, பத்துகாணி ஒருநூறாம்வயல் பழங்குடி குடியிருப்புகளில் கடந்த 1 மாத காலத்திற்கு மேலாக ஒரு புலி ஆடு, மாடுகளை அடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சி எடுத்து நேற்று முன்தினம் பத்துகாணி கல்லறைவயல் என்ற இடத்தில் வைத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை பலத்த பாதுகாப்புடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்த்தனர். அங்கு இருந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது அது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அட்டகாசம் செய்த ஆண் புலியைப் பிடித்ததில் வனத்துறையினர் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர். அதேவேளையில் பழங்குடி மற்றும் ரப்பர் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் முழுமையாக அச்சம் விலகாத நிலையிலேயே இருந்து வருகிறது.
வேறு விலங்குகள்
இதுகுறித்து சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்த சுரேஷ்குமார் கூறுகையில், 'கடந்த மாதம் 8 -ந் தேதி இரவு புலி என்னுடைய பசுமாட்டைத் கடித்துக் குதறியது. அப்போது புலியை நான் நேரில் பார்த்தேன். இப்போது புலியை வனத்துறையினர் பிடித்துள்ளதால் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் முழுமையாக மகிழ்ச்சி என்று கூறமுடியாது. ஏற்கனவே இங்கு கரடி, காட்டுப்பன்றி, யானை போன்றவைகளின் அட்டகாசம் தொடர் கதையாக இருந்து வருகிறது. எனவே வேறு விலங்குகள் எப்போது வருமோ? என்று மனத்திற்குள் அச்சம் இருக்கத்தான் செய்கிறது' என்றார்.
பெண் புலியா? ஆண் புலியா?
சிற்றாறு பகுதியைச் சேர்ந்த ஞான சவுந்தரம் கூறுகையில், 'புலி கடந்த மாதம் 18 -ந் தேதி எனது 4 ஆடுகளை கடித்துக் குதறியது. இப்போது புலியைப் பிடித்துள்ளார்கள். இனிமேல் எங்களின் ஆடு, மாடுகளை கொஞ்சம் நிம்மதியாக கட்டி வைக்க முடியும். அதே வேளையில் வன விலங்குகளிடம் இருந்து எங்களுக்கும், எங்களது கால் நடைகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு அளித்தால் தான் முழு நிம்மதியாக இருக்க முடியும்' என்றார்.
இதுகுறித்து மோதிரமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், 'இந்த பகுதியில் அட்டகாசம் செய்த புலி பெண் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பிடிபட்ட புலி ஆண் புலியாக உள்ளது. எனவே முழுமையாக அச்சம் விலகாத நிலை இருந்து வருகிறது' என்றார்.
சிறுத்தை நடமாட்டம்
இதுபோன்று ஆறுகாணி மேல்மண்ணடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் கூறும் போதும், ' இந்தபகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளது. சிறுத்தைகள் நடமாடும் தடங்கள் இந்த பகுதியில் தெரிகின்றன. எனவே சிறுத்தைகளையும் பிடித்து அப்புறப்படுத்தி தகுந்த பாதுகாப்பு அளித்தால்தான் நிம்மதியாக அச்சமின்றி கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியும்' என்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-
காட்சி அறையில் அடைப்பு
குமரி மாவட்டம் பத்துகாணி கல்லறை வயல் பகுதியில் பிடிக்கப்பட்ட புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம். புலியை கூண்டுக்குள் வைத்தவாறு வாகனத்தில் கொண்டு வரும் போது அதற்கு திட உணவு கொடுக்கக் கூடாது என்பதால், தண்ணீரும், குளுக்கோஸ் 'டிரிப்' பும் செலுத்தினோம். புலியானது இப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள காட்சி அறையில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புலியானது களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு குமரி வனப்பகுதிக்கு வந்திருக்கலாம். அது நல்ல உடல் திறனோடு இருந்த காலத்தில் காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருந்தது. பின்னர் உடல் திறன் குன்றிய நிலையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துள்ளது.
அச்சுறுத்தல் இருக்காது
குமரி மாவட்டத்தில் புலி ஒன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். மாவட்டத்தில் பழங்குடி பகுதிகளில் இன்னும் புலிகள் இருப்பதாக மக்கள் கூறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். அதே வேளையில் குமரி மாவட்ட வனப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளன. சிறுத்தைகளால் மனித உயிர்களுக்கும், பழங்குடியினரின் கால்நடைகளுக்கும் ெபரிய அளவில் அச்சுறுத்தல் இருக்காது'
இவ்வாறு அவர் கூறினார்.