பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி


பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:40+05:30)

நெலாக்கோட்டை அருகே பசுமாட்டை அடித்துக்கொன்ற புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

நெலாக்கோட்டை அருகே பசுமாட்டை அடித்துக்கொன்ற புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புலி தாக்கியது

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வீடுகளை உடைத்து வருகிறது. மேலும் சில சமயங்களில் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை கவ்வி செல்கின்றன.

இந்த நிலையில் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை அருகே அவுண்டேல் பகுதியை சேர்ந்த சிவமல்லையன், தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு தனது கால்நடைகளை அனுப்பி வைத்தார். அதில் ஒரு பசு மாடு, அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த புலி பாய்ந்து தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பசுமாடு உயிரிழந்தது. பின்னர் அங்கிருந்து புலி ஓட்டம் பிடித்தது.

அச்சம்

இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, கடந்த வாரம் மற்றொரு தனியார் எஸ்டேட் பகுதியில் 3 மாடுகளை புலி அடித்து கொன்றது. இதனால் வெளியே நடமாட அச்சமாக உள்ளது. எனவே கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் வுட்பிரையர் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே நெலாக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் நடமாடும் புலியை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Next Story