கூடலூர் அருகே பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி -கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை


கூடலூர் அருகே பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி -கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2023 7:00 PM GMT (Updated: 14 Aug 2023 7:00 PM GMT)

கூடலூர் அருகே பசு மாட்டை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே பசு மாட்டை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் சிறுத்தை புலிகள் அடிக்கடி இரவில் ஊருக்குள் வந்து வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்கிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே புளியம்பாரா கருங்குட்டி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்.

இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை அப்பகுதியில் விட்டார். அப்போது மாலை 3 மணிக்கு வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை புலி அடித்து கொன்றது. தொடர்ந்து மாட்டின் உடலை அப்பகுதியில் உள்ள புதருக்குள் இழுத்து சென்றது. இதைக் கண்ட விவசாய தொழிலாளர்கள் சத்தம் போட்டனர்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இதனால் மாட்டின் உடலை போட்டு விட்டு அங்கிருந்து புலி தப்பி ஓடியது. தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கூடலூர் வனத்துறையினர் நேரில் சென்று இறந்த பசு மாட்டின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் பதிந்திருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது புலி நடமாட்டம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊருக்குள் வந்து பசுமாட்டை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும் போது, பசு மாட்டை கொன்ற இடத்தில் புலியின் கால் தடயங்கள் உள்ளது. இருப்பினும் சிறுத்தை புலியின் கால் தடத்தையும் ஒத்து காணப்படுகிறது. இதனால் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story