புகாருக்குள்ளான ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுப்பதா?கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


புகாருக்குள்ளான ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுப்பதா?கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான டெண்டருக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.


தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகாருக்குள்ளான ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுப்பதா? என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்களை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்: புகாருக்குள்ளான ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுப்பதா? என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்களை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவசர கூட்டம்

கூடலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் மற்றும் பண பலன்கள் முறையாக வழங்குவதில்லை என புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை வெளிக்கொணர்வு திட்ட பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர் தற்போதைய ஒப்பந்ததாரர் டெண்டர் எடுக்க தகுதி பெற்றுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய டெண்டருக்கு நகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற அவசரக்கூட்டம் நேற்று மதியம் 12 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி மன்ற தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் (பொறுப்பு) வசந்தன், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்

கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை வெளிக்கொணர்வு திட்ட பணிகளுக்கான புதிய டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர் ராஜேந்திரன், 'தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து கடந்த 4-ந்தேதி சம்பளம் வழங்குதல், வருங்கால வைப்பு நிதி விவகாரத்தில் புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரருக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் நிர்ணயித்த தொகையை விட ரூ.20 லட்சம் குறைத்து டெண்டர் எடுக்க விண்ணப்பித்துள்ள 2-வது நிறுவனத்துக்கு ஒப்பந்தபுள்ளி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதனால் டெண்டர் முறையாக நடைபெறவில்லை. எனவே தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இதே கருத்தை கவுன்சிலர்கள் வர்கீஸ், லீலா வாசு, ராஜூ, சத்தியசீலன் என பெரும்பாலானவர்கள் முன்மொழிந்தனர். ஆனால் மற்றொரு தரப்பை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இளங்கோ, தனலட்சுமி, ஜெயலிங்கம், மும்தாஜ், நிர்மல், சகுந்தலா தேவி, உஷா, கலைவாணி, ஆபிதா, கௌசல்யா ஆகிய 10 பேர் தற்போதைய ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்க வேண்டுமென கோரி நகராட்சி தலைவர் பரிமளாவிடம் கடிதங்கள் அளித்தனர். இதனால் இருதரப்பு கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டது.

தீர்மானம் ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து நகராட்சி மன்ற கூட்டத்தில் டென்டருக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போதைய ஒப்பந்ததாரருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்களை நகராட்சி வளாகத்தில் கூடியிருந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story