கொடைக்கானல் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பஸ்: கண்ணாடியை உடைத்து 42 பயணிகள் மீட்பு


கொடைக்கானல் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பஸ்:  கண்ணாடியை உடைத்து 42 பயணிகள் மீட்பு
x

கொடைக்கானல் மலைப்பாதையில், அந்தரத்தில் சுற்றுலா பஸ் தொங்கியது. கண்ணாடியை உடைத்து 42 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தேனி

குஜராத் சுற்றுலா பயணிகள்

குஜராத் மாநிலம் மிசானா மாவட்டம் உன்ஜனா பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 42 பேர் ஆம்னி பஸ் ஒன்றில் தென்னிந்திய பகுதிகளுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி அவர்கள், கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாவை முடித்துவிட்டு தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்ற அவர்கள், அங்குள்ள இடங்களை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு பழனிக்கு வந்த சுற்றுலா பயணிகள், முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். இதனையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் முடிவு செய்தனர்.

அந்தரத்தில் தொங்கிய பஸ்

அதன்படி கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு இன்று காலை சுற்றுலா பயணிகள் பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ்சை, பெங்களூருவை சேர்ந்த பிரசன்னா (43) என்பவர் ஓட்டினார்.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது. டம் டம் பாறை என்ற இடத்தில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

ஒரு கட்டத்தில், வலதுபுறத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்து அந்தரத்தில் தொங்கியபடி பஸ் நின்றது. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் அபயகுரல் எழுப்பினர்.

கண்ணாடியை உடைத்து மீட்பு

இதுகுறித்து அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசாரும், பெரியகுளம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். அதன்படி பஸ்சில் பயணம் செய்த 42 பயணிகள் மற்றும் டிரைவரை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து, தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story