நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சுற்றுலா பயணி பலி
ஏற்காடு நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சுற்றுலா பயணி பலியானார்.
ஏற்காடு:-
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நல்லூர் நீர்வீழ்ச்சி. கடந்த வாரம் ஏற்காட்டில் பரவலாக மழை பெய்ததால், இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 52) என்பவர் தன்னுடைய மனைவி சாந்தி, நண்பர் மற்றும் அவரது மனைவி என 4 பேர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் 4 பேரும் நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். அப்போது சக்திவேல் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.