செங்கல் ஏற்றி சென்ற டிராக்டர் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்து
செங்கல் ஏற்றி சென்ற டிராக்டர் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறுமிகள் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்.
விபத்து
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டின் வேலைக்காக செங்கல் ஏற்றிக்கொண்டு டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டர் நேற்று சென்று கொண்டிருந்தது. திருச்சி- கரூர் மாநில நெடுஞ்சாலையில் ராஜேந்திரம் பகுதிக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் அப்பகுதி வழியாக செல்லும் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் வாய்க்கால் கட்டையின் மேல் பகுதியில் தொங்கிக்கொண்டு இருந்தது. இந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் வாய்க்கால் தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிர்தப்பினர்
இந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட செங்கல் இருந்த டிப்பரில் 2 சிறுமிகள் மற்றும் ஒரு பெண்மணி இருந்துள்ளனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் உயிர்தப்பினர். விபத்துக்குள்ளான இந்த டிராக்டர், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இந்த டிராக்டரை ஓட்டி சென்றவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.