கால்நடைகளுக்கு ஆசி வழங்கும் பாரம்பரிய கொண்டாட்டம்


கால்நடைகளுக்கு ஆசி வழங்கும் பாரம்பரிய கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:30 AM IST (Updated: 18 Jan 2023 11:53 PM IST)
t-max-icont-min-icon

கீழமிக்கேல்பட்டி வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவில் கால்நடைகளுக்கு ஆசி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு கொண்டாட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

அரியலூர்

அந்தோணியார் பொங்கல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி கடந்த 14-ந் தேதி போகி பண்டிகை, 15-ந்் தேதி பொங்கல் பண்டிகை, 16-ந் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் விழா என நேற்று முன்தினத்துடன் பொங்கல் பண்டிகை நிறைவடைந்தது. இதேபோன்று தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் இந்துக்கள் காணும் பொங்கல் கொண்டாடும் நாளுக்கு அடுத்த நாள் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். அதன்படி நேற்று கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதித்தூதர் ஆலயத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆசீர்வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புனிதநீர் தெளிக்கப்பட்டது

இந்நிகழ்வுக்காக கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் இருந்து காளை மாடுகள், பசு மாடுகள், கன்று குட்டிகள், வண்டி மாடுகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அழைத்து வந்து அதற்கு வர்ணம் பூசி மாலைகள் மற்றும் சலங்கைகள் கட்டி அலங்கரித்து ஆலயத்திற்கு பொதுமக்கள் கொண்டு வந்தனர். கால்நடைகளுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பங்குத்தந்தை அடைக்கல சாமி ஜெபம் செய்து கால்நடைகளை ஆசீர்வதித்தார். அதன் பிறகு கால்நடைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அருட்தந்தைகள் அருள்ராஜ், மைக்கேல் பிராங்கிளின் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5 ஆயிரம் மாடுகளை அழைத்து வந்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடுவோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாடுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

போலீசார் பாதுகாப்பு

விவசாயத்திற்கு மாடுகளை பயன்படுத்துவதை குறைத்து இயந்திரங்கள் பயன்படுத்துவதை அதிகரித்து வருவதால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாகவும் பராமரிப்பதற்கு அதிக செலவுகள் ஆவதாலும் விவசாயிகள் மாடுகளை வளர்ப்பதை கால போக்கில் குறைத்து விட்டனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் கால்நடைகளுக்கு ஆசீர்வாதம் செய்து வழிபடுவதன் மூலம் அவற்றிற்கு நோய்கள் தாக்காமல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதனால் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பாரம்பரியம் மாறாமல் செய்து வருகிறோம் என்றனர். நிகழ்ச்சிக்கு தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.


Next Story