செடி, கொடிகள் வளர்ந்து காடாக மாறிய பயணியர் மாளிகை


செடி, கொடிகள் வளர்ந்து காடாக மாறிய பயணியர் மாளிகை
x

மதுக்கூரில் செடி, கொடிகள் வளர்ந்து பயணியர் மாளிகை காடாக மாறி உள்ளது. இதை புதிதாக கட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மதுக்கூர், அக்.22-

மதுக்கூரில் செடி, கொடிகள் வளர்ந்து பயணியர் மாளிகை காடாக மாறி உள்ளது. இதை புதிதாக கட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணியர் மாளிகை

மதுக்கூர் சிவக்கொல்லையில் 70 ஆண்டுகளுக்கும் முன்பு நெடுஞ்சாலை துறை மூலம் மதுக்கூர் பயணியர் மாளிகை கட்டப்பட்டது. இந்த பயணியர் மாளிகையில் பெரியார், முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, மற்றும் அன்பில் தர்மலிங்கம், கம்யூனிஸ்டு தலைவர்களான ஜீவானந்தம், ராமமூர்த்தி உள்பட முக்கிய கட்சி தலைவர்கள் இங்கு வந்து தங்கி சென்றுள்ளனர்.14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 15 வார்டுகளை கொண்ட மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சியாக திகழ்கிறது.

புயலில் சேதமடைந்தது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் இந்த பயணியர் மாளிகை சேதமடைந்தது.அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர், இந்த கட்டிடத்தை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் பயணியர் மாளிகை கட்டிடம் மேலும் சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. இங்கு சமூக விரோதிகள் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த கட்டிடம் மதுகூடமாக மாறி விட்டது. புதர் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பயணியர் மாளிகையை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். மேலும் அங்கு மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story