பண்ருட்டியில் வீடு மீது முறிந்து விழுந்த மரம்
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டியில் வீடு மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர்தப்பினார்கள்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரியான வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 45.60 அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இருப்பினும் ஏரியை பாதுகாக்க வினாடிக்கு 282 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் அடுத்த காற்றழுத்த சுழற்சி பகுதியானது, இன்று (புதன்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இது உருவான 48 மணி நேரத்தில் சற்று வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்
இதனால் கடலூரில் நேற்று அதிகாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, மே.மாத்தூர், வடக்குத்து, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
இதில், கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம், பாலாஜிநகர், நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பத்தினர் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மழைநீர் தேங்கி நிற்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்னும் மழை தீவிரமடையும் நிலையில், நிலமை மோசமாகும் என்பதால் அவர்கள் அச்சத்துடன் வசித்து வருகிறார்கள்.
5 பேர் உயிர்தப்பினர்
பண்ருட்டி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை விழமங்கலம் வ.உ.சி.நகரில் உள்ள புளிய மரத்தின் ஒரு பகுதி மட்டும் அங்குள்ள வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதில் வீட்டு மேற்கூரை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் வசித்து வந்த கூலி தொழிலாளி ராஜேஷ்குமார்(வயது 35), அவரது மனைவி ஷர்மிளா( 31), மற்றும் 3 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் நகராட்சி துணைத்தலைவர் சிவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இருப்பினும் மரம் முழுமையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் பண்ருட்டி நகரசபை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
12 கால்நடைகள் சாவு
மேலும் இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் 12 கால்நடைகள் உயிரிழந்தன. 8 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இருப்பினும் அந்த வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.