சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2023 7:45 PM GMT (Updated: 20 July 2023 7:45 PM GMT)

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர். இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனிடையே தொடர் பலத்த மழையால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே தவளமலை என்ற இடத்தில் காலை 8 மணிக்கு மரம் வேருடன் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

கண்காணிப்பு

பின்னர் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின் வாள்கள் மூலம் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. அதன் பின்னர் பயணிகள் தாமதமாக தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல் மழை தொடர்ந்து பெய்ததால் புத்தூர் வயல், தொரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் ஊருக்குள் வெள்ளம் வராமல் இருக்க வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் புகும் அபாயம் உள்ள இடத்தில் வசிக்கக்கூடிய மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே மாலை 3 மணிக்கு மழை நின்று வெயில் அடித்தது. பின்னர் இரவில் மழை பெய்ய தொடங்கியது.


Next Story