சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 May 2023 7:00 PM GMT (Updated: 13 May 2023 7:00 PM GMT)

கூடலூர்-ஊட்டி இடையே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-ஊட்டி இடையே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்தது

கூடலூர் பகுதியில் பகலில் மிதமான வெயிலும், மாலை அல்லது இரவில் அடிக்கடி மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்ற வாகனங்களும், கோவையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அகற்றும் பணி

இதுகுறித்து கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை அறுத்து அகற்றும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து காலை 5 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது. இதன் காரணமாக வாகனங்களில் வந்தவர்கள் மிக தாமதமாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

கூடுதல் போலீசார்

இதேபோன்று வார இறுதி நாள் என்பதால் கூடலூர், முதுமலை மற்றும் பைக்காரா பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரித்து காணப்படுவதால் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story