சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோடை மழை
மலைப்பிரதேசமான வால்பாறையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
இதற்கிடையில் ஏப்ரல், மே மாதங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
மரம் விழுந்தது
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வால்பாறையில் மதிய வேளையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மதியமும் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 3 மணி வரை பலத்த மழையாக கொட்டியது.
இதன் காரணமாக வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்றில் வெள்ளம்
இதனால் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கொட்டும் மழையில் நடுவழியில் நின்றது. இதையடுத்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியே போக்குவரத்து சீரானது.
மழை காரணமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வருகிற 26-ந் தேதி வால்பாறையில் கோடை விழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.