அழகர்கோவில் பஸ் நிலையம் அருகே திடீரென சாய்ந்து விழுந்த மரம்- அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
அழகர்கோவில் பஸ் நிலையம் அருகே மரம் திடீரென்று சாய்ந்து விழுந்தது. நல்லவேளை அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அழகர்கோவில்
அழகர்கோவில் பஸ் நிலையம் அருகே மரம் திடீரென்று சாய்ந்து விழுந்தது. நல்லவேளை அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரம் விழுந்தது
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன், முருகப்பெருமானின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அழகர்கோவில் பஸ் நிலையம் அருகே தீர்த்த தொட்டி செல்லும் சாலையின் தொடக்கத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஆண்டுகள் பழமையான மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று அந்த பூங்காவில் இருந்த பழமையான கொன்றை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பூங்காவை சுற்றி நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மரத்துடன் தரையில் சரிந்து விழுந்தன.
எப்போதும் பக்தர்கள் மர நிழலுக்கு இங்கு ஒதுங்குவார்கள். நல்லவேளை நேற்று யாரும் அங்கு ஒதுங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்ததில் யாருக்கும் காயம் இல்லை.
மரம் வெட்டி அகற்றம்
இது குறித்து தகவல் அறிந்ததும் துணை ஆணையர் ராமசாமி உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள் விரைந்து சென்று அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினார்கள்.
இது குறித்து கோவில் கடை வியாபாரி முத்துப்பொருள் கூறும் போது,
மரம் சாய்ந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மரம் சாய்ந்த போது நல்லவேளை யாரும் அங்கு நிற்கவில்லை. கோவில் நிர்வாகம் விரைந்து மரத்தை வெட்டி அகற்றியது பாராட்டுக்குரியது என்றார்.