பள்ளத்தில் பாய்ந்த லாரி; அதிர்ச்சியில் டிரைவர் சாவு
பள்ளத்தில் லாரி பாய்ந்த அதிர்ச்சியில் டிரைவர் இறந்தார்.
தாயில்பட்டி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைத்துரை (வயது 36). இவர், லாரியில் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு செங்கோட்டையில் இறக்கிவிட்டு, மீண்டும் திரும்ப வந்து கொண்டு இருந்தார். வெம்பக்கோட்டை ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் உள்ள பள்ளத்தில் லாரி பாய்ந்ததாக கூறப்படுகிறது. அந்த அதிர்ச்சியில் அவர் பேச்சுமூச்சின்றி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் வெள்ளைத்துரை இறந்துவிட்டார். அவரது உடலை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். முதற்கட்ட விசாரணையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி லாரி பள்ளத்தில் பாய்ந்திருக்கலாம் என்றும், அதன்பின்னர் அவர் இறந்திருக்கலாம் என தெரியவருவதாக போலீசார் தெரிவித்தனர்.