நொய்யல் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்


நொய்யல் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக ரெயில்வே இரும்பு பாதை செல்கிறது. இதன் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு, தமிழ்நாட்டில் உள்ள கோவை, ஈரோடு பகுதியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவு பயணிகள் ரெயில்களும், சாதாரண பயணிகள் ரெயில்களும், சரக்கு ரெயில்களும் சென்று வருகின்றன.

ரெயில்வே கேட்

இதேபோல் பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி, ஈரோடு, கோவை, பல்லடம், அரவக்குறிச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களும், பல்வேறு வகையான லாரிகள், கார்கள், டிராக்டர்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் போடப்பட்டது. ரெயில்கள் வரும்போது கேட் அடைக்கப்பட்டிருப்பதும், ரெயில்கள் சென்ற பிறகு ரெயில்வே கேட்டை திறந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

ரெயில்கள் நீண்ட தூரத்தில் வரும் போது ரெயில்வே கேட் மூடப்பட்டு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட நேரம் வரிசையாக நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

சுரங்கப்பாதை

எனவே இப்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நொய்யல் பகுதியை சேர்ந்த பசுபதி:- பரமத்தி வேலூர்- கொடுமுடி செல்லும் சாலையில் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. அடிக்கடி ரெயில்வே கேட்டை பூட்டி விடுவதால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை சுரங்கப்பாதை அமைத்து தர கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சுரங்கப்பாதை அமைத்துக்கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

நூற்றாண்டு பிரச்சினை

சேமங்கி செல்வ நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்:- நொய்யல் பகுதியில் ரெயில்வே கேட் போடப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அவதியடைந்து வருகிறோம். பொதுமக்கள் கொடுக்கும் எந்த புகாருக்கும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே நூற்றாண்டு பிரச்சினைக்கு ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால் அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும்.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம்:- இந்த ரெயில்வே கேட் வழியாக வாகனத்தில் அடிக்கடி சென்று வருகிறேன். இந்த வழியாக செல்லும் பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில் வெகு தூரத்தில் வரும்போதே ரெயில்வே கேட்டை அடைத்து விடுவார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே ரெயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்.

கல்குவாரி

கரூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா:- நான் க.பரமத்தி பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு இந்த வழியாகத்தான் சென்று இறக்கி வருகிறேன். கிராவல் மண் கொண்டு செல்லும் போதும், மண்ணை இறக்கி விட்டு வரும்போதும் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி பூட்டப்பட்டிருப்பதால் நான் அதிக நடை கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ரெயில் பாதைக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால் எங்களை போன்ற லாரி டிரைவர்கள் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும்.

வாகன ஓட்டிகள் பாதிப்பு

குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் சசிகுமார்:- சரக்கு ஆட்டோவில் பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று இறக்கி வருவது வழக்கம். முக்கியமான நேரங்களில் அவசரமாக செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்போது சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும்போது ரெயில்வே கேட் மூடப்பட்டு ½ மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்போது பொருட்களை ஏற்றி விட்டவர்களுக்கும், டென்ஷன், எனக்கும் டென்ஷன் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்படைந்து வருகிறோம். ரெயில்வே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால் அனைத்து வாகன டிரைவர்களுக்கும் நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story