பெரம்பலூர் அருகே லாரி மோதி வேன் கவிழ்ந்து ரூ.4½ லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்


பெரம்பலூர் அருகே லாரி மோதி வேன் கவிழ்ந்து ரூ.4½  லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்
x

பெரம்பலூர் அருகே லாரி மோதி வேன் கவிழ்ந்ததில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சாலையில் மஞ்சள் கரு ஆறாக ஓடியது.

பெரம்பலூர்

முட்டைகளை ஏற்றி சென்ற வேன்

நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றி கொண்டு ஒரு வேன் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு புறப்பட்டது. வேனை நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார்.

முட்டைகளை இறக்குவதற்காக நாமக்கல்லை சேர்ந்த தொழிலாளி பெரியசாமி (45) உடன் வந்தார். நேற்று காலை துறையூர்-பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச்சாலை அருகே வேன் சென்று கொண்டிருந்தது.

சாலையில் ஆறாக ஓடியது

அப்போது புறவழிசாலை வழியாக துறையூர் நோக்கி சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்புறம் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த ரூ.4½ லட்சம் மதிப்பிலான 90 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமானது. மேலும் சாலையில் முட்டைகளின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆறாக ஓடி தூர்நாற்றம் வீசியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் செந்தில்குமார், தொழிலாளி பெரியசாமி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து காரணமாக துறையூர்-பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story