சோமங்கலம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சோமங்கலம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

சோமங்கலம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

சென்னையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் ஆலையில் மினி வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒட்டி வந்த வேனில் பழுது ஏற்பட்டது. பழுதை நீக்குவதற்காக சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை விட்டுள்ளார். வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு நேற்று தாம்பரம்- சோமங்கலம் சாலையில் வேனை ஓட்டிச் சென்றார். வேன் சோமங்கலம் தர்காஸ் பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேனின் முன் பக்கத்தில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதையடுத்து வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. வேனை ஓட்டி சென்ற டிரைவர் பார்த்திபன் வேனை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், சோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் ½ மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து சம்பவத்தால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலையில் வேன் தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சோமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story