வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டு கூடு
தச்சம்பட்டு அருகே வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டு கூடுவை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்டாப்பட்டில் வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, மேற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தெரு செல்லும் சாலை ஓரத்தில் பனைமரம் ஒன்று உள்ளது. இந்த பனை மரத்தில் பெரிய அளவிலான வண்டுகள் நிறைந்து கூடுகள் கட்டி பல வருடங்களாக இருந்து வருகிறது.
மேலும் அவ்வழியாக செல்பவர்களை அவ்வப்போது கொட்டியும் வருகிறது. இதனால் பொதுமக்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த விஷவண்டு கூடுகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளைஅச்சுறுத்தி வரும் விஷவண்டு கூடுகளை தீயணைப்பு துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.